ஆண்ட்ராய்டு டிவி – அடுத்த தலைமுறை சின்னத்திரை

world-of-content
சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு டிவியை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு டிவி என்பது தொலைக்காட்சிப் பெட்டியல்ல, இது ஸ்மார்ட் டிவிக்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு இயக்குதளம் (operating system). இணையதள வசதிகொண்ட உங்கள்  சோனி, ஷார்ப் போன்ற ஸ்மார்ட் டிவிக்களில் ஆண்ட்ராய்டு செட்-ஆப் பாக்ஸ் பொருத்தி இனி ஆண்ட்ராய்டு டிவியை கண்டு களிக்கலாம்.

உங்களிடம் ஆண்ட்ராய்டு செல்பேசி அல்லது மின்பலகை  இருக்கும் பட்சத்தில் ஆண்ட்ராய்டு டிவியை அதனுடன் Wi-Fi மூலமாக இணைத்து ஏகப்பட்ட புது வசதிகளை அனுபவிக்கலாம். வீடியோ கேம்ஸ், சமூகவலைதளங்கள், ஸ்கைப் போன்ற பல வசதிகளை முற்றிலும் புதிய கோணத்தில் அனுபவிக்க முடியும்.

டிவிக்கான ஆண்ட்ராய்டு இயக்குதளம் வெளியானபின் அதற்கென வடிவமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான App-கள் படையெடுத்து வந்து நம்மை புதிய டிஜிட்டல் அனுபவங்களுக்குள் மூழ்கடிக்கும் என நம்பலாம்.

உங்கள் உண்மையுள்ள
ஊடகம்

Photo Courtesy: www.android.com

Advertisements

கூகுள் கண்ணாடி – விழியருகே உலகம்

google-glass-technodify-01

ஒரு காலத்தில் டெஸ்க்டாப்பாக மேஜையில் வீற்றிருந்த கணினி பின்னர் லேப்டாப்பாக நம் மடியில் ஏறியது. பின்னர் அதுவும் சுருங்கி இப்போது மின்பலகையாக நம் உள்ளங்கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இனி அடுத்த தலைமுறை கணினியை அனைவரும் தங்கள் விழியருகே சுமந்து கொண்டு திரியும் காலம் வந்துவிட்டது.

ஆம், தொழில்நுட்பப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கூகுள் கண்ணாடி விற்பனைக்கு வந்துவிட்டது. அமெரிக்க மதிப்பில் இதன் விலை 1500 டாலர்களாம், அதாவது இந்திய ரூபாயில் சுமார் 90,000. ஆண்ட்ராய்டு இயக்குதள வசதியுடன் கூடிய இந்தத் தொழில்நுட்ப அதிசயத்தில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம்.

அலாவுதீன் பூதம் போல எஜமானரின் குரல் கட்டளைகளுக்கு இணங்கி உலகத்தையே விழியோரத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது. இதுவரை ஸ்மார்ட் போன்களில் நம் விரலுக்கு கட்டுப்பட்ட வீடியோ, ஆடியோ, மேப்புகள், தொடர்பு வசதிகள், இணையம் அனைத்தும் இனி நம் குரலுக்குக் கட்டுப்பட்டவை.

கீழ்க்கண்ட காணொளியில் கூகுள் கண்ணாடி செயல்படும் விதம் காட்டப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் ஒரு மனிதனின் அன்றாடக வாழ்க்கை எப்படி மாறிப்போய்விடுகிறது பாருங்கள்.

ஏற்கனவே நமது கையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் செல்பேசி பழுதடைந்து ஒருநாள் பயன்படுத்த முடியாவிட்டால் ஒரு கையே பழுதடைந்து விட்டதுபோல உணர்கிறோம். அறிவியல் தொழில்நுட்பம் அந்த அளவுக்கு நம்மை ஆட்கொண்டுவிட்டது. ஆனால் இந்த கூகுள் கண்ணாடி இன்னும் ஒருபடி மேலே போய் நமது கண்களையே ஆக்கிரமித்து வேறொரு நிழல் உலக அனுபவத்துக்குள் நம்மை கொண்டுபோய் வைத்து விடுகிறது. இது மனித வாழ்வில் இனி எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற பயமும் கூடவே தொற்றிக்கொண்டு விடுகிறது.

கூகுள் கண்ணாடி பயன்படுத்தும் ஒருவரின் கண் எப்படி மாறிவிடுகிறது என்று ஒரு கேலிப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

google-glass-geek-614509

இது ஒருவேளை கேலிக்காக வெளியிடப்பட்டிருந்தாலும் இந்தப் புதிய தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்வில் மட்டுமல்ல நமது கண்பார்வை உள்ளிட்ட ஆரோக்கியத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக கூகுள் தனது கண்ணாடியை குழந்தைகளும், கண்பார்வைக் குறைவுள்ளவர்களும் பயன்படுத்த வேண்டாம்  என்று ஏற்கனவே அறிவித்து விட்டது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும், மனித நாகரீகத்தை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்லும் என்று தொழில்நுட்ப விரும்பிகளால் ஆஹா ஓஹோவென பாராட்டப்பட்டாலும். இதன் மூலம் சமூக சீரழிவுகள் பெருகி மனிதனின் உளவியல் சீர்கேடு அடையும் என்ற ஆழ்ந்த கவலையையும் பல பொதுநல விரும்பிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

உங்கள் உண்மையுள்ள
ஊடகம்

Photo Courtesy:
http://www.freemake.com
http://www.technodify.com

வெற்றிகரமான வரைகலைக்கு (Graphic Design) மூன்று நிபந்தனைகள்:

3RULES

அழகாக இருக்கும் வரைகலைகளெல்லாம் (Graphic Designs) வெற்றி பெற்றவை என்று அர்த்தமாகாது. வெற்றிகரமான வரைகலை ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள்:

1. தெளிவான கருத்துரு (Concept):

உங்கள் வரைகலை ஒரு தெளிவான கருத்துருவைக் (Concept) கொண்டதாக இருக்க வேண்டும். உங்கள் டிசைன் வழியாக மக்களுக்கு சொல்லும் செய்தி (Message) ஒன்று இருக்க வேண்டும். அந்த செய்தி வரைகலையில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவே உங்கள் வரைகலையின் வெற்றிக்கான ஆதாரம்.

2. தெளிவான கட்டமைப்பு (Layout)

உங்கள் டிசைன் பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் தேவையான இடைவெளிகளோடு தெளிவாகக் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்கு அதிக முக்கியத்துவமும் எதற்கு குறைவான கவனம் தேவைப்படுகிறதோ அதற்கு குறைந்த முக்கியத்துவமும் அளித்திருக்க வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல் வேண்டும். வள்ளல் போல வண்ணங்களை வாரி இறைக்காமல் தேவையான இடங்களில் தேவையான வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வண்ணப்பயன்பாடுகள் உங்களை ஒரு முதிர்ச்சியற்ற டிசைனராகக் காட்டிவிடும்.

3. தெளிவான எழுத்துரு (Typography)

உங்கள் கணினியில் நிறைய எழுத்துருக்களை நீங்கள் பதிவிறக்கி வைத்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் ஒரே டிசைனில் அள்ளிக் கொட்டிவிட வேண்டும் என்று நினைத்தல் கூடாது. இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று வகையான எழுத்துருக்களை ஒரு டிசைனில் பயன்படுத்தினால் அதுவே நேர்த்தியாக இருக்கும்.

பெரிய நிறுவனங்களின் வரைகலைகளை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பாருங்கள். அவர்கள் தங்கள் நிறுவனங்களின் Brochure, Flyers , White Papers , Annual Reports போன்றவைகளை pdf வடிவில் தங்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக இணைய தளங்களில் வைத்திருப்பார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கில சஞ்சிகைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். அவற்றில் கிடைக்கும் ஐடியாக்களை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பயிற்சி செய்து பாருங்கள். நீங்களும் ஒரு சிறந்த வரைகலைஞராக பரிமளிக்க வாழ்த்துக்கள்.

இலச்சினை(Logo) எனும் அடையாளம்

இலச்சினை (Logo) ஒரு நிறுவனத்துக்கு அவசியமா? 

இலச்சினையின் என்பது உங்கள் நிறுவனத்தின் குறிக்கோளையும், செயல்பாடுகளையும் யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பிரதிபலிக்கக் கூடியது. மிக நேர்த்தியாக வடிவமைக்கபட்ட ஒரு இலச்சினை மக்களின் கவனத்தை கவர்கிறது, மனங்களில் ஆழமாகப் பதிகிறது.

உங்கள் நிறுவனத்தின் மீது ஒரு உயர்ந்த எண்ணத்தையும், உங்கள் சேவையின்மீது ஆழந்த நம்பிக்கையையும் உருவாக்குகிறது.

அந்த இலச்சினையை உங்கள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும், விளம்பரங்களிலும், தொடர்பு சாதனங்களிலும் பயன்படுத்தும்போது மக்கள் மத்தியில் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வது வெகு எளிதாகிறது.

ஒரு நிறுவனத்தின் இலச்சினை எப்படி இருக்க வேண்டும்?

இலச்சினை அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாக இருந்தாலும் அதைவிட முக்கியம் அது உங்கள் நிறுவனத்தின் குறிக்கோள், மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடுகளை எளிய முறையில் விளக்குவதாக இருக்க வேண்டும்.

இலச்சினைக்கான சரியான வண்ணம் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். வணிக நிறுவனங்களின் இலச்சினைகள் பெரும்பாலும் ஊதா நிறத்திலும், தொண்டு நிறுவனங்களின் இலச்சினைகள் பெரும்பாலும் ஆரஞ்சு நிறத்திலும் இருப்பதைக் காணலாம். ஊதா என்பது திறமை மற்றும் நேர்த்தியையும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வர்ணங்கள் புதிய விடியலுக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. ஆனாலும் இது கட்டாயமல்ல. வண்ணத் தேர்ந்தெடுப்பு அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

இலச்சினை எல்லா ஊடகங்களின் பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். சிறிய விலாச அட்டையிலிருந்து (visiting card) காணொளி (video) வரை அனைத்து ஊடகங்களுக்கும், எல்லா அளவுகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். எனவே உங்கள் இலச்சினையினை நீங்கள் எப்போதும் எல்லா பயன்பாட்டுக்கும் ஏற்ற வகையில் வெக்டர் வடிவத்தில் (vector format) வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் தங்கள் இலச்சினையை அசைவூட்டிப் பார்க்க ஆசைப்படுவார்கள் (animated logo) இலச்சினையின் வடிவம் அதற்கேற்றதாகவும் முன்கூட்டியே திட்டமிட்டு அமைக்கப்படல் அவசியம்.

எல்லா சாதனங்களிலும் வண்ண இலச்சினையை பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே கருப்பு வெள்ளை நிறத்திலும் ஒரு பிரதி கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். கருப்பு வெள்ளையில் பார்த்தாலும் அது தனது வடிவத்தையும், தனித்துவத்தையும் இழந்துபோகாதபடி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் இலச்சினையில் எழுத்துக்கள் இருக்கும் பட்சத்தில் அது தெளிவாக இருக்கும் விதத்தில் இருக்க வேண்டும். இலச்சினையை மிகச் சிறியதாகப் பயன்படுத்தினால் எழுத்துக்கள் குலைந்து போய் வாசிக்க முடியாதபடி போய்விடக்கூடாது. இன்னொரு கவனத்துக்குரிய காரியம் அந்த எழுத்துரு என்ன என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் இலச்சினையை நீங்கள் மறுபடி வடிவமைக்கும் சூழல் ஏற்படும்போது எழுத்துரு என்ன என்று மறந்துபோய் குழம்பிக்கொண்டிருக்கும் சூழல் அமைந்துவிடக்கூடாது.

இலச்சினை உருவாக்கம் ஒரு அருமையான கலை. ஓவியருக்கு வேலை சிறியதாக இருந்தாலும் இலச்சினையை வடிவமைக்கும் முன் அவர் அந்த நிறுவனத்தைக் குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும். அந்த நிறுவனம் இலச்சினையின் வழியாக என்ன செய்தியை பகிர்ந்துகொள்ள வருகிறது என்பதை உறுதி செய்துகொண்டபின்னரே வடிவமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும்.

இப்பபணியை ஊடகம் நிறுவனம் மிக நேர்த்தியாக இதுவரை செய்து வந்திருக்கிறது. ஊடகம் வடிவமைத்துள்ள சில இலச்சினைகள் உங்கள் பார்வைக்கு:

logo

தங்கள் நிறுவனத்தின் இலச்சினை உருவாக்கம் மற்றும் மறுஉருவாக்கத்துக்கு எங்களை அணுகுங்கள்.

இப்படிக்கு

உங்கள் உண்மையுள்ள

ஊடகம்