விளம்பரங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

brand

நம் தெருக்களில் பழம் விற்றுக்கொண்டு வரும் வியாபாரிகளிடம் “அண்ணே! நல்ல பழமா இருக்கா?” என்று அவர்களிடமே கேட்கும் சில வாடிக்கையாளர்களை பார்த்திருப்போம். எந்த வியாபாரியாவது “இல்லண்ணே, அழுகி நாறிப்போன பழங்களைத்தான் கொண்டு வந்து உங்க தலையில கட்டப்போறேன்” என்று சொல்லுவாரா? அவர் சொல்லமாட்டார் என்று தெரிந்தாலும் பேரத்தை ஆரம்பிக்க அப்படி ஒரு கேள்வியை சிலர் கேட்பது வழக்கம்.

உடனே அந்த வியாபாரி தான் கொண்டுவந்திருக்கும் பழங்களை வானளாவ புகழ ஆரம்பித்துவிடுவார். “மரத்துலயே பழுத்ததுண்ணே! அவ்வளோ ருசியா இருக்கும், நீங்க சாப்டுப் பார்த்து நல்லா இருந்தா காசுகொடுங்க இல்லாட்டி வேணாம். இப்பத்தேன் பக்கத்துத் தெரு பேங்க் மேனேஜர் வீட்டுல 2 கிலோ போட்டுட்டு வந்தேன், அந்த டீச்சர் வீட்டுலகூட 3 கிலோ வாங்குனாங்க… ” இன்றைய நவீன மீடியாக்களின் அத்தனை விளம்பர யுக்தியும் இங்கே இருக்கிறது. பொருளின் தரத்தை மெய்ப்பிக்க ஒரு ஆதாரமில்லாத கதை சொல்லுவது, திருப்தி இல்லாவிட்டால் பணம் வாபஸ் என்று சவால் விடுவது, நமக்குப் பரிச்சயமான சில நம்பகமானவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைத் தனது வாடிக்கையாளராகக் காட்டிக்கொள்வது அத்தனையும்…

அந்தப் பழவியாபாரி ஆயிரம் கதைகள் சொன்னாலும் அந்த வாடிக்கையாளர் கண்மூடித்தனமாக பழத்தை வாங்கமாட்டார். தானே கைகளில் எடுத்து, சோதனை செய்துதான் வாங்குவார். எந்த வியாபாரியும் தன்னுடைய பொருளை ஆஹா ஓஹோவென்று புகழத்தான் செய்வான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஐம்பது ரூபாய்க்கு ஒரு எளிய பழவியாபாரியின் சுய விளம்பரத்தை நம்பாத நாம் அதே யுக்தியைக் கையாளும் ஒரு பன்னாட்டு வியாபாரியின் சுயவிளம்பரத்தில் எளிதாக ஏமாந்து இலட்சக்கணக்கில் இழந்து விடுகிறோம்.

சமீபத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்து 61 பேரின் உயிரைப் பலிவாங்கிய மவுலிவாக்கம் “ட்ரஸ்ட் ஹைட்ஸ்” கட்டிடத்தின் விளம்பரம் இது. விளம்பரத்தின் காட்சிகள் எவ்வளவு நம்பிக்கையூட்டும் விதத்தில் இருக்கிறது பாருங்கள். இதை இப்போது பார்க்கும்போது அடக்கமுடியாத துக்கமும், கோபமும் ஏற்படுகிறது. ஒருவேளை இந்த விபத்து நடக்கும்முன்னர் இதே விளம்பரத்தைப் பார்த்திருந்தால் இந்த அப்பார்ட்மெண்ட்டில் நாமும் ஒரு வீடு வாங்கிப்போட்டால் என்ன என்று நமக்கேகூடத் தோன்றியிருக்கலாம்.

இந்த விளம்பரத்துக்கான அனிமேஷனை அருமையாக அமைத்துக் கொடுத்த அந்த நிறுவனத்துக்கு இப்படி நடக்கும் என்று முதலிலேயே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த விளம்பர நிறுவனமும் தான் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரத்தை முழுமையாக ஆராய்ந்து உறுதி செய்துவிட்டு பின்னர் விளம்பரங்களை வடிப்பது என்பது எல்லா நேரங்களிலும் சாத்தியமும் இல்லை. விளம்பர நிறுவனங்களையோ, அதில் நடிப்பவர்களையோ பொறுத்தவரை இது தொழில் அவ்வளவுதான். ஆனால் சட்டங்கள் இனி கடுமையாக்கப்படலாம் என்பதாலும், மனசாட்சிக்குப் பயந்தும் இனிமேலாவது தாங்கள் விளம்பரப்படுத்தப்போகும் பொருட்களின் தரத்தை தங்களால் இயன்ற அளவிற்கேனும் உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் அந்த ப்ராஜெக்டை எடுப்பது அவர்களுக்கும் நல்லது.

ஒரு பன்னாட்டு குளிர்பான விளம்பரத்தில் பிரபல நடிகர் தோன்றினால் அதை இரசிப்பதும், பின்னர் அதே குளிர்பானத்தில் பூச்சி மருந்து இருப்பதாகவும், கரப்பான் பூச்சி செத்துக் கிடந்ததாகவும் செய்தி வந்தால் அதில் நடித்த அந்தப் பிரபலத்தை நாலு திட்டு திட்டிவிட்டு பின்னர் மறந்துபோவதும் நமது வாடிக்கை. ஆனால் இன்னும் அந்த நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க பிரபலங்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். யார் எக்கேடோ கெட்டுப்போகட்டும் எனக்கு பணம் வந்தால் போதும் என்ற சமூகப் பொறுப்பற்ற தன்மையைத்தான் அது காட்டுகிறது. எனவேதான் ரஜினி, கமல் போன்ற சில மூத்த நடிகர்கள் மட்டும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் எந்த நுகர்பொருள் விளம்பரங்களிலும் நடிப்பதில்லை.

நாம் வாழும் உலகம் முழுக்க முழுக்க வியாபாரத்தை மையமாகக் கொண்ட உலகம். சில ஆண்டுகளுக்கு முன்னால் டிவியைத் திறந்தாலே ரமேஷ் கார்ஸ், சிநேகம் பைனான்ஸ், அனுபவ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்கள்தான் எல்லாச் சேனல்களையும் ஆக்கிரமித்திருக்கும். அந்த நிறுவனங்கள் மோசடி செய்து மாட்டிக்கொண்டபின்னர் அதையும் பரபரப்புச் செய்தியாக்கி தனக்கு டி.ஆர்.பி ரேட்டை ஏற்றிக்கொண்டு ஆதாயமடைந்ததும் அதே டிவி சேனல்கள்தான். இந்த மோசடியில் தங்களுக்கும் நேரடியாக பங்கில்லாவிட்டாலும் அந்த மோசடி நிறுவனங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததில் தங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பங்கிருக்கிறது என்பதை அவர்கள் உணரவும் இல்லை, மனசாட்சியின் பொருட்டாகிலும் அவர்கள் அதற்காக தங்கள் நேயர்களிடம் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.

இன்றும்கூட பகல்நேரங்களில் கிட்டத்தட்ட எல்லா டிவி சேனல்களையும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மவுலிவாக்கம் சம்பவத்துக்குப் பின்னர் அந்த விளம்பரங்களையும் அதில் நடிக்கும் பிரபலங்களையும் பார்க்கும்போது ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது.

நாம் மேலே சொன்ன பழவியாபாரி நமக்கு நம்பிக்கை ஊட்ட பக்கத்துத் தெரு பேங்க் மேனேஜரையும், டீச்சரையும் காட்டியதுபோல, இன்றைய மீடியா விளம்பரங்கள் நமக்கு கிரிக்கெட் வீரர்களையும், பிரபல சினிமா நட்சத்திரங்களையும் காட்டுகின்றன. இது ஒரு மாயை அவ்வளவுதான். அந்த நட்சத்திரங்கள் அந்தப் பொருளைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று நம்பினால் அது நம் தவறு. வாங்கும் பொருளின் தரம் குறைவாக இருந்தால் அந்த பொருளுக்கான விளம்பரப் படத்தில் நடிகர், நடிகையர்கள் மீது வழக்குப் போடலாம் என்று இரண்டாண்டுகளுக்கு முன் நுகர்வோர் தீர்ப்பாயம் ஒரு வழக்கில் மக்களை அறிவுறுத்தியிருந்தது. இது ஒரு நல்ல நடவடிக்கைதான், ஆனாலும் ஒரு சோப்புக்காகவும், குளிர்பானத்துக்காகவும் பெரிய பிரபலங்கள் மீது வழக்குத்தொடரும் துணிவு எத்தனை சாமானியர்களுக்கு வரும். அதைவிட வருமுன் காப்போம் என்று பொருளை வாங்கும் முன்னரே அதைக் குறித்து ஜாக்கிரைதாய் இருத்தல் நலமல்லவா!

இன்று செல்பேசி முதல் சோப்புகள் வரை எல்லா பொருட்களுக்கான நுகர்வோர் விமர்ச்சனங்களும் (Reviews) இணையதளங்களில் உள்ளன. அந்த விமர்ச்சனங்கள் 100% நம்பகத்தன்மை வாய்ந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும். ஒரு முக்கியமான பொருளை வாங்குமுன்னர் இது போன்ற விமர்சனங்களை வாசித்துவிட்டுப் பின் முடிவெடுப்பது பயனுள்ளதாக இருக்கும். இனியாவது நாம் நிறுவனங்களின் சுயவிளம்பரங்களை நம்பாமல் நமது சுய அறிவைப் பயன்படுத்தி பொருட்களை நுகர்தல் நலம்.

இப்படிக்கு
உங்கள் உண்மையுள்ள
ஊடகம்
இணையதளம்: http://www.oodakam.in/
வலைப்பூ: https://oodakamblog.wordpress.com/
ட்விட்டர்: https://twitter.com/oodakam

Photo Courtesy: http://www.brandingstrategyinsider.com/

Advertisements